Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

நர்சிங் யாதவ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஹரியாணா காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கு விசாரணையின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தேவ்பிரீத் சிங் கூறுகையில், "மல்யுத்த வீரர்கள் தரியாபூர் காலன், ஜிதேஷ் ஆகியோர் தனது உணவு மற்றும் உற்சாக பானங்களில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை கலந்ததாக நர்சிங் யாதவ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தான் பங்கேற்க இருந்ததை தடுக்கும் நோக்கில் அவர்கள் அந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் நர்சிங் குற்றம்சாட்டியுள்ளார்' என்றார்.

நர்சிங் யாதவ் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாக, ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சுமார் 20 நாள்களுக்கு முன்பாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாக நர்சிங் யாதவ் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், நர்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது. இதனால் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.