மைதானத்திற்குள் புகுந்து கோலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய ஆட்டத்தில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. 

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 15 ஓவரின் முடிவில் ரசிகர் ஒருவர், பாதுகாப்பு தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் புகுந்தார். ஷார்ட் மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேப்டன் விராட் கோலியிடம் ஓடிவந்த அந்த ரசிகர், கோலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். அவரிடம் இருந்து தன்னை தூரப்படுத்தி கொண்டார் கோலி.

பின்னர் கோலியுடன் செல்ஃபி எடுத்தார் அந்த ரசிகர். இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அந்த ரசிகரின் செயலை கோலியும் ரசிக்கவில்லை. பின்னர் பாதுகாவலர்கள் வந்து அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். 

இந்நிலையில் தடுப்பை மீறி மைதானத்திற்குள் சென்று போட்டிக்கு இடையூறு செய்த அந்த ரசிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான முகமது கான் என்ற அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கோலி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோதும் இதேபோல் இரண்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடிவந்து கோலியுடன் செல்ஃபி எடுத்தனர்.