தொட்டியம்,

தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் சார்பில் மாநில அளவிலான 16 வயதுக்குட்பட்ட இளையோர் கூடைப்பந்து தகுதித்திறன் போட்டி திருச்சிமாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாநில அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவ–மாணவிகள் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் 29 ஆண்கள் அணிகளும், 21 பெண்கள் அணிகளும் சேர்த்து 50 அணிகள் பங்கேற்கின்றனர்.

சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தகுதித்திறன் கூடைப்பந்து போட்டியில் தேர்ச்சி பெறுபவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வர்.

வியாழக்கிழமை தொடங்கிய போட்டி வருகிற 6–ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கரூர், வேலூர், விருதுநகர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

முன்னதாக கொங்குநாடு கல்லூரி கலையரங்கில் கல்லூரியின் தலைவர் பெரியசாமி தலைமையில் கூடைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தலைவர் ராஜ்சத்தியன், இணைசெயலாளர் பார்வேந்தன், அரைஸ் ஸ்டீல் லோகேஸ் உள்பட விளையாட்டு வீரர்களும், கூடைப்பந்து கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.