Can not take the Australian team easily - Rohit Sharma
ஆஸ்திரேலிய அணிக்கு இங்குள்ள சூழல் தெரியும் அதனால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
காயம் காரணமாக ஆறு மாத காலமாக ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, கடந்த ஏப்ரலில் மீண்டும் அணிக்குத் திரும்பினார். அதனைத் தொடர்ந்து விளையாடிய பத்து ஆட்டங்களில் மூன்று சதங்களை விளாசி அசத்தினார்.
இந்த நிலையில் அவர், “காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்புவது எளிதல்ல. பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புவது மிகக் கடினமாகும்.
களத்தில் விளையாடுகிறபோது அறுவை சிகிச்சை செய்து கொண்டது தொடர்பான நினைவு நமது மனதிற்குள் இருக்கும்.
காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டி எனக்கு சிறப்புமிக்கதாக அமைந்தது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, மீண்டும் காயம் ஏற்பட்டுவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை. அதனால்தான் இந்திய அணிக்காக களமிறங்கியபோது என் மனதில் எதிர்மறையான சிந்தனைகள் எதுவும் இல்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைப் பொறுத்தவரையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்தத் தொடரில் விளையாடவில்லை. அவர் விளையாடினால், நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
எனினும், ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இங்குள்ள சூழல் தெரியும். அதனால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
