Can not imagine losing on home soil tragedy goalie

சொந்த மண்ணில் தோற்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியிடம் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

இதில் புணே அணி 161 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு கோலி கூறியது:

“இதேபோன்று விளையாடினால் நிச்சயம் நாங்கள் வெற்றிக்கு தகுதியானவர்களாக இருக்க முடியாது.

இதற்கு முந்தைய ஆட்டத்தில் நாங்கள் கடுமையாகப் போராடித் தோற்றோம். ஆனால் இப்போது புணேவுக்கு எதிராக வெற்றியை விட்டுக் கொடுத்துவிட்டோம்.

எங்கள் அணியில் நிறைய குறைகள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். சொந்த மண்ணில் தோற்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

கடந்த சீசனில் கடைசி 4 ஆட்டங்களிலும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினோம். ஆனால் அதேபோன்று எல்லா நேரங்களிலும் நடக்காது.

தொழில்முறை கிரிக்கெட் வீரராக ஓர் அணிக்காக பெரும் திரளான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும்போது இதுபோன்று விளையாடக்கூடாது.

எனினும் வரும் போட்டிகளில் பெங்களூர் அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும். அனைத்து வீரர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.