பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் புணே ராணுவ அணியை வீழ்த்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவையில் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 53-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கியது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் புணே ராணுவ அணியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் எதிர்கொண்டன.

இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 77-59 என்ற புள்ளிகள் கணக்கில் புணே ராணுவ அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

மூன்றாவது, நான்காவது இடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் காவல் துறை அணி 95-72 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயா வங்கி அணியை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 

பரிசளிப்பு விழாவுக்கு பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குநரும், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவருமான ஜி. செல்வராஜ், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு பி.எஸ்.ஜி. சுழற் கோப்பையையும், ரூ.1 இலட்சத்துக்கான காசோலையையும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், எஸ்.என்.ஆர். நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலருமான டி.லட்சுமிநாராயணசாமி வழங்கினார்.

இரண்டாம் இடம் பெற்ற ராணுவ அணிக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த பஞ்சாப் காவல் துறை அணிக்கு ரூ.25 ஆயிரமும், நான்காம் இடத்தைப் பிடித்த விஜயா வங்கி அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டன. 

சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வு செய்யப்பட்ட புணே ராணுவ அணியின் வீரர் விக்கி ஹடாவுக்கு கோப்பையும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.