அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகின் 2-ஆம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே விலகினார்.

இந்தாஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனில் இருந்து நட்சத்திர வீரர்கள் பலர் விலகியுள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜப்பானின் கெய் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிச் ஆகியோர் வரிசையில் தற்போது ஆன்டி முர்ரேவும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ஆன்டி முர்ரே செய்தியாளர்களிடம் கூறியது:

“விம்பிள்டன் போட்டிக்குப் பிறகு மீண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். இடுப்பு வலி சிகிச்சை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்தேன். ஓய்வு, சிகிச்சை என அனைத்தையும் மேற்கொண்டதை அடுத்து, கடந்த சில நாள்களாக பயிற்சியின்போது மீண்டு வந்தேன்.

ஆனால், ஒரு போட்டியில் வெல்லும் அளவுக்கு இன்னும் மீளவில்லை என உணர்கிறேன். எனவே, இந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் விளையாடவில்லை.

இயலாமல் விளையாடி, என்னை மேலும் காயப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. என்னால் இயன்றவரையில் விரைவாக, அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே மீண்டும் களத்துக்கு திரும்ப விரும்புகிறேன்.

அடுத்த இரண்டு நாள்கள் எனது அணியினருடன் ஆலோசித்து முடிவெடுக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.