அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா ஆருடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பை இன்னும் ஆறரை மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இதுவரை உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதேநேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு அணியும் உலக கோப்பைக்காக தயாராகிவருகின்றன. 

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாக இருக்கும் நிலையில், உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். உலக கோப்பை ஜூரம் இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், அதன் இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என பிரயன் லாரா ஆருடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரயன் லாரா, இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி வலுவாக உள்ளது. இந்திய அணியும் வலுவாக உள்ளது. ஆனால் ரோஹித் மற்றும் கோலியை அதிகமாக சார்ந்திருக்கிறது. 4ம் வரிசை முதல் 7ம் வரிசை வரையிலான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும். ஏனென்றால் எப்போதுமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிவிட முடியாது என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.