சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக இருவரை குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா.

அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களாக திகழ்பவர்களில் முக்கியமானவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரயன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக கிரிக்கெட் உலகில் மதிக்கப்படக்கூடிய வீரர். தனது விக்கெட்டை வீழ்த்த எதிரணி பவுலர்களை அதிகமாக உழைக்க வைக்கக்கூடியவர். அவ்வளவு எளிதாக தனது விக்கெட்டை கொடுத்துவிட மாட்டார். 

1990ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய லாரா, 22 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை குவித்த வீரராக லாரா திகழ்கிறார். லாரா ஒரு இன்னிங்ஸில் அடித்த 400 ரன்களை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. அதேபோல முதல்தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 501 ரன்களை குவித்து ஆட்டமிழக்கவில்லை. 

இவ்வாறு பல சாதனைகளை தன்னகத்தே கொண்ட லாரா, எல்லா காலத்திலும் சிறந்த வீரர். இந்நிலையில், இவர் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக இருவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், மற்றொருவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லாரா, டிவில்லியர்ஸும் கோலியும் சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்கள். இருவரும் மிகச்சிறந்த திறமைசாலிகள். இருவரும் அரிய பல சம்பவங்களை செய்துவருகின்றனர். இவர்களின் ஆட்டத்திறன் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று புகழ்ந்துள்ளார். 

டிவில்லியர்ஸ் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டதால் மிஸ்டர் 360 என அழைக்கப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார் டிவில்லியர்ஸ்.

அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருபவர் விராட் கோலி. இவர் ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார். இவர்கள் இருவரையும்தான் லாரா, சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக குறிப்பிட்டுள்ளார்.