ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனுக்கான ஏலம் இன்று மதியம் 2.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. 

இந்த ஏலத்தில் 351 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்டு இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள ஓரளவிற்கு பெரிய மற்றும் பெரிய வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் கழட்டிவிடப்பட்ட நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் முக்கியமான வீரர். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒரு காலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்டு அடிப்படை விலையாக ரூ.1 கோடியுடன் களத்தில் உள்ளார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் யுவராஜும் தோனியும் இணைந்து ஆடுவதை பார்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். அது நடக்கிறதா என்பதை பார்ப்போம். 

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட தென்னாப்பிரிக்காவின் ஜேபி டுமினி, ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரும் பெரிய வீரர்கள்.

நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன், இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோரும் அவர்கள் இருந்த அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டதால் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஃபின்ச், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் உலக கோப்பையில் ஆடும் விதமாக ஐபிஎல் சீசன் முழுதும் ஆடமாட்டார்கள். இதை அவர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் அவர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவது சந்தேகம்தான். 

இவர்கள் தவிர இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் இந்த ஐபிஎல்லில் அடிப்படை விலை ரூ. 2 கோடியுடன் ஏல ரேஸில் உள்ளார்.