தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, 5-1 என ஒருநாள் தொடரையும், 2-1 என டி20 தொடரையும் வென்று அசத்தியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்றதில் பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதிலும் புவனேஷ்வர் குமார், பும்ரா வேகக்கூட்டணி ஏமாற்றமளிக்காமல் தொடர்ச்சியாக இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்கிறது.

நேற்று நடந்த கடைசி 20 ஓவர் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினர். 173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வீரர்களை தொடக்கத்திலேயே புவனேஷ்வர் குமார் கட்டுப்படுத்தினார்.

டி20 போட்டியை பொறுத்தவரை முதல் 6 ஓவர்கள் தான் மிக முக்கியம். அவைதான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்ககூடியவை. அந்த வகையில், முதல் 6 ஓவர்களில் தென்னாப்பிரிக்க வீரர்களை முழுமையாக கட்டுப்படுத்தினார் புவனேஷ்வர் குமார். 15 ஓவரில்தான் தென்னாப்பிரிக்கா 100 ரன்களையே எட்டியது. ஆனால் 16,17,18, 19 ஆகிய ஓவர்களில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை பறித்தார். இறுதியாக போட்டியை வென்ற இந்திய அணி, கோப்பையையும் கைப்பற்றியது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புவனேஷ்வர் குமார், டி20 போட்டியை பொறுத்தவரை முதல் 6 ஓவர்கள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்ககூடியவை. எனவே முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் பந்துவீச வேண்டும். அதைத்தான் செய்தேன். டி20 போட்டிகளில் முதல் மற்றும் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீச காரணம் ஐபிஎல் தான். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கிடைத்த அனுபவங்களின் மூலமாகத்தான் சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீச முடிகிறது என புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.