இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரஸா மே, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். போட்டியில், சிறந்த அணி வெல்லட்டும்' என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு, பிரதமர் மோடி திங்கள்கிழமை மதிய விருந்தளித்தார். அப்போது, உணவு நன்றாக இருப்பதாக தெரசா மே கூறியுள்ளார்.
இதற்கு பிரதமர் மோடி, "எங்களிடம் சுவையாக உணவு சமைக்கும் "குக்' உள்ளார்; உங்கள் நாட்டு கிரிக்கெட் அணியில் தான் உண்மையான "குக்' உள்ளார்' என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
