Benga 37 runs by the undermining of the state

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் வென்றது.

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

இதில் தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடி சதம் கடந்தார். மொத்தம் 120 பந்துகளை சந்தித்த அவர், 14 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர் கெளஷிக் காந்தி 15, பாபா இந்திரஜித் 32, வாஷிங்டன் சுந்தர் 22, அஸ்வின் கிறிஸ்ட் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர்.

அடுத்தடுத்த விக்கெட் சரிவால், 47.2 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது தமிழக அணி.

பெங்கால் தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 218 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்கால் அணியில் சுதிப் சாட்டர்ஜி மட்டும் அதிகபட்சமாக அரைசதம் கடந்தார். மொத்தம் 79 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதர வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் 180 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது பெங்கால் அணி.

தமிழக தரப்பில், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். விஜய் சங்கர், பாபா அபராஜித், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.