இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடிய விஹாரியிடம் சில வார்த்தைகளை உதிர்த்து சீண்டியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கை ஓங்கியிருக்கிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தது. 160 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை விஹாரி - ஜடேஜா ஜோடி சிறப்பாக ஆடி மீட்டெடுத்தது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 77 ரன்களை சேர்த்தது. அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த விஹாரி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

விஹாரி - ஜடேஜா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணி, ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டியது. இல்லையென்றால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட அதிக ரன்கள் வித்தியாசம் அடைந்திருக்கும். விஹாரியின் நிதானமான தெளிவான ஆட்டத்தை கவாஸ்கர் பாராட்டியிருந்தார். 

இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸின்போது, ஸ்டோக்ஸ் வீசிய 45வது ஓவரின் முதல் பந்தில் விஹாரி சிக்ஸர் விளாசினார். அப்போது நடந்த சம்பவம் ஒன்றை விஹாரி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய விஹாரி, நான் இந்த போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக ராகுல் டிராவிட்டிடம் கால் செய்து பேசினேன். அப்போது பதற்றமில்லாமல், மன தைரியத்துடன் ரசித்து ஆடுமாறு டிராவிட் ஆலோசனை வழங்கினார். எனினும் களத்திற்கு செல்லும்போது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. அதை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன். களத்தில் நிலைக்கும் வரை பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு ஆடினேன். எதிர்முனையில் இருந்த கேப்டன் கோலியும் நம்பிக்கை அளித்துக்கொண்டே இருந்தார். 

ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாச, அதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டோக்ஸ் ஏதோ பேசினார். அப்போது விராட் கோலி அவரருகே சென்றார். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை. களத்தில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாள்வர். எனவே களத்தில் இதுபோன்ற குரல்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தவதே எனது ஸ்டைல். அதனால் ஸ்டோக்ஸ் பேசியதை நான் கண்டுகொள்ளவில்லை என்று விஹாரி கூறியுள்ளார். 

இதேபோலத்தான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், சிக்ஸருடன் தனது ரன் கணக்கை தொடங்கினார். அந்த இன்னிங்ஸில் அருமையாக ஆடிய அவரை வீழ்த்திவிட்டு, ஸ்டூவர்ட் பிராட் சில வார்த்தைகளை உதிர்த்தார். அதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்திய அணியின் அறிமுக வீரர்கள் சிறப்பாக ஆடுவதை இங்கிலாந்து பவுலர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இதுபோன்ற சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்.