ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா – இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, தேனீக்கள் மைதானத்திற்குள் புகுந்ததால், பீதியடைந்த வீரர்களும், நடுவர்களும் தரையில் படுத்துக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டனர்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட், மூன்று டி20 மற்றும் 5 ஒருநாள் பாேட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த டெஸ்ட் தாெடாில் தென் ஆப்பிரிக்க அணியும், டி20 தொடரில் இலங்கை அணியும் கோப்பையை வென்றுள்ளன. 

இதனைத் தொடா்ந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன. தொடா்ந்து 2 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று, தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

பாேட்டியின் 24வது ஓவரில் இலங்கை அணி விளையாடிக் கொண்டிருந்தபோது, மைதானத்திற்குள் ஆயிரக்கணக்கான தேனீக்கள் திடீரென புகுந்தன. ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களை அவைகள் சூழ்ந்து கொண்டன.

இதனால் பீதியடைந்த வீரர்களும், நடுவர்களும் தரையில் படுத்துக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டனர். தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு மைதானத்தில் இருந்த தேனீக்கள் விரட்டப்பட்டன. இதையடுத்து ஓவர்கள் குறைப்பின்றி ஒருமணிநேரம் தாமதமாக போட்டி மீண்டும் தொடங்கியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.