BCCI was the deadline for state cricket associations

மாநில கிரிக்கெட் சங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தொடர்பான அறிக்கைக்கு 10 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு கெடு வைத்துள்ளது.

டெலாய்ட் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்த தணிக்கைகள் தொடர்பான அறிக்கை, சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தத் தணிக்கையின் மூலம், ஐதராபாத், அஸ்ஸாம், கோவா, பரோடா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கங்களில் முறைகேடு நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

மாநில கிரிக்கெட் சங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் நேரடியாக பிசிசிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அந்த அறிக்கையை தெரிந்து கொண்டால் மட்டுமே முறைகேடுகளை அகற்ற முடியும் என்றும், நிர்வாகத்தை வெளிப்படத்தன்மையுடன் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் பிசிசிஐ நிர்வாகக் குழுவை கேட்டுக்கொண்டன. அதனை அடுத்து, டெலாய்ட் தணிக்கை அறிக்கை அவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரோடா கிரிக்கெட் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியது,

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முறைகேடான நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்தது போன்றவை டெலாய்ட் தணிக்கை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற இருக்கிறது. இதில், வீரர்களுடனான ஒப்பந்தம் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கான தினப்படி திருத்தம் ஆகியவை குறித்து கலந்து ஆலோசிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.