லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என, பி.சி.சி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகத்தில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளை நீதிபதி லோதா குழு பரிந்துரை செய்து, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டபோதிலும், அதற்கு பி.சி.சி.ஐ. தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், லோதா கமிட்டி கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது. லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை எனக்கூறுவதில் உண்மையில்லை என்றும், சில பரிந்துரைகளை பி.சி.சி.ஐ பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், இதுதொடர்பான விரிவான அறிக்கை லோதா குழுவிற்கு 40 முறை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
