இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியமானது என்பதால் இதில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

முதலில் டி20 தொடர் நடக்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள்(21ம் தேதி) நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. 

டி20 போட்டிகளில் ஆடும் அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா, ரஹானே, முரளி விஜய், ஹனுமா விஹாரி, பார்த்திவ் படேல் ஆகிய ஐந்து வீரர்களும் நியூசிலாந்தில் அந்நாட்டு ஏ அணிக்கு எதிராக நடந்துவரும் அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கும் இன்னும் செல்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியிலும் ஆடாமல் ரஞ்சி டிராபியில் ஆடிவரும் அஷ்வின், இஷாந்த், ஷமி ஆகியோருக்கு பிசிசிஐ ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாளை கேரளாவுக்கு எதிராக தொடங்க உள்ள போட்டியில் மட்டும் ஷமி கலந்துகொள்ளலாம் எனவும் ஆனால் 15 ஓவர்கள் வரை மட்டுமே வீசவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

வரும் 24ம் தேதி அஷ்வின், ஷமி, இஷாந்த் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்பதால் அஷ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இனி எந்த ரஞ்சி போட்டியிலும் ஆடக்கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.