நாளை நடைபெறவுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகள் மட்டும்தான் பங்கேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

லோதா கமிட்டி அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பான பிசிசிஐ-யின் 4-வது இடைக்கால அறிக்கை மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியது:

“மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகள் மட்டும்தான் பிசிசிஐ சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மேலும், கிரிக்கெட் வாரியத்தை சீரமைப்பது குறித்து நீதிபதி லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் அமல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அதனை அமல்படுத்துவதில் சிரமங்கள் எதுவும் இருந்தால் அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்.

கிரிக்கெட் வாரிய முடிவுகளை எடுப்பதில் ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு வாக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் நீதிமன்றம் தயாராக உள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.

பின்னர் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.