ஆஸ்திரேலியாவை சேர்ந்த அண்டர் 19 வீரர் அதிரடியாக ஆடி 113 பந்துகளில் இரட்டை சதம் விளாசி மிரட்டியுள்ளார். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அசத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் அண்டர் 19 நேஷனல் சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் அடிலெய்டில் நடந்த போட்டியில் நியூசௌத் வேல்ஸ் மெட்ரோ அணியும் நார்தர்ன் டெரிடரி(வடக்கு மாகாண) அணியும் மோதின.

இந்த போட்டியில் நியூசௌத் வேல்ஸ் மெட்ரோ அணி வீரர் ஆலி டேவிஸ் என்ற வீரர் ருத்ரதாண்டவம் ஆடினார். 115 பந்துகளில் 207 ரன்களை குவித்தார். சதமடிக்க 74 பந்துகளை எடுத்துக்கொண்ட டேவிஸ், அடுத்த சதத்தை வெறும் 39 பந்துகளில் எட்டினார். 113 பந்துகளில் 17 சிக்ஸர்களுடன் இரட்டை சதம் விளாசினார். அதுமட்டுமல்லாமல் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார். இந்த சாதனையை யுவராஜ் சிங் மற்றும் தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ் ஆகிய இருவரும் ஏற்கனவே செய்துள்ளனர்.

அதேபோல லிமிடெட் ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகிய மூவரும் 16 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். டேவிஸ் இந்த இன்னிங்ஸில் 17 சிக்ஸர்களை விளாசி அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார். சர்வதேச போட்டியில அவர் இந்த சம்பவத்தை செய்யவில்லை என்றாலும் இது சாதாரண விஷயமல்ல என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியது.