ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்திலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக விலகியுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் ஐபிஎல் தொடரில், இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்குவதால் வழக்கத்தைவிட முன்னதாகவே ஐபிஎல் தொடங்கி முடிக்கப்பட உள்ளது. 

அதனால் ஐபிஎல் ஏலமும் முன்னதாகவே நடத்தப்பட உள்ளது. வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடக்கும் ஐபிஎல் ஏலம், இந்த முறை வரும் 18ம் தேதியே ஜெய்ப்பூரில் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 

தங்கள் அணிகளால் கழட்டிவிடப்பட்ட வீரர்களும், புதிய வீரர்களும் தங்களது அடிப்படை விலையுடன் தங்களது பெயர்களை பதிவு செய்துவருகின்றனர். 

இந்நிலையில், அடுத்த ஆண்டு உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவை உள்ளதால், தேசிய அணிக்காக ஆடுவதற்காக அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் விலகியுள்ளனர். டெல்லி அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மேக்ஸ்வெல், பஞ்சாப் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட ஆரோன் ஃபின்ச் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் 12வது ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளனர்.