இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று வெற்றியுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பியது. முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரையும் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியது இந்திய அணி.

வெற்றியுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி, அங்கு அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 4-1 என வென்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவருகிறது. வரும் 10ம் தேதியுடன் நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடியும் நிலையில், அங்கிருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்புகின்றனர். 

அதன்பிறகு ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி ஆட உள்ளது. இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடுகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் புறக்கணிக்கப்பட்ட டார்ஷி ஷார்ட் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபின்ச் தலைமையிலான இந்த அணியின் துணை கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க் காயத்தால் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ரிச்சர்ட்ஸன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல மிட்செல் மார்ஷும் அணியில் இடம்பெறவில்லை. 

ஆஸ்திரேலிய அணி:

 ஃபின்ச்(கேப்டன்), பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், டர்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), குல்ட்டர்நைல், ரிச்சர்ட்ஸன், பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் லயன், ஆடம் ஸாம்பா, டார்ஷி ஷார்ட்.