இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தொடர்ந்து சொதப்பிவந்த தொடக்க ஜோடியான ராகுலும் முரளி விஜயும் நீக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹனுமா விஹாரியும் அறிமுக வீரர் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கி ஓரளவுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர். 66 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிய மயன்க் அகர்வால் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி சென்றார். எனினும் 76 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பிறகு புஜாராவுடன் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். புஜாராவும் அரைசதம் அடித்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 68 ரன்களுடனும் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அரைசதத்தை நெருங்கிய கோலியால், முதல் நாள் ஆட்டம் முடியும்வரை அரைசதம் அடிக்க முடியவில்லை. 47 ரன்களில் இருந்த கோலிக்கு 87 மற்றும் 89வது ஓவர்களை வீசிய மிட்செல் ஸ்டார்க், தனது வேகத்தால் கடும் நெருக்கடி கொடுத்தார்.  80வது ஓவருக்கு பிறகு இரண்டாவது புதிய பந்தை எடுத்ததும் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. அனல் பறக்க வீசினார் ஸ்டார்க்.  87வது ஓவரில் கோலியை திணறடித்த ஸ்டார்க், ரன் ஏதும் எடுக்க விடவில்லை. இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரான 89வது ஓவரிலும் கோலியை ரன் அடிக்க அனுமதிக்கவில்லை. 

இதில் 87வது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஸ்டார்க் வீசிய பந்தை கோலி அடிக்க முற்பட்டபோது, பந்து அவுட் சைடு எட்ஜாகி விக்கெட் கீப்பரும் ஆஸ்திரேலிய கேப்டனுமான டிம் பெய்னிடம் சென்றது. ஆனால் டிம் பெய்ன் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். ஸ்டார்க் அதிருப்தியடைந்தார். அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் கோலி 47 ரன்களில் வெளியேறியிருப்பார். டிம் பெய்னின் புண்ணியத்தால் கோலி அவுட்டாகவில்லை. 

கடந்த போட்டியில் டிம் பெய்ன் - கோலி இடையேயான மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தற்போது இந்த போட்டியில் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் கோலிக்கு தொடர்ந்து ஆடும் வாய்ப்பை கொடுத்துள்ளார் டிம் பெய்ன். இந்த நன்றி கடனுக்காகவாவது இனிமேல் டிம் பெய்னிடம் சண்டை போடாதீர்கள் கோலி....