Australian Open Tennis Rafael Nadal - Marin Chile in the quarter-finals
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் - குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் மோதவுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நடால், போட்டித் தரவரிசையில் 24-வது இடத்தில் இருந்த ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-7(4/7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார் நடால்.
வெற்றி குறித்து பேசிய நடால், "இந்த ஆட்டம் சிறந்த ஒன்றாக இருந்தது. டியேகோவின் விடாப்பிடியான ஆட்டத்தால் சற்று களைப்படைந்த போதிலும், இறுதிவரை போராடி வெற்றி பெற்றேன்' என்றார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச், போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை 6-7(2/7), 6-3, 7-6(7/0), 7-6(7/3) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
வெற்றி குறித்து பேசிய சிலிச், "முதல் சுற்றிலிருந்தே கடினமான போட்டியாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். நடாலுக்கு எதிரான காலிறுதிச் சுற்று மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதால், அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்' என்றார்.
ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் வெற்றிப் பெற்ற நடாலும், மரின் சிலிச்சும் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.
