பொதுவாக எதிரணியினரை வம்புக்கு இழுத்து அவர்களை கோபப்படுத்தியோ மனரீதியாக வீழ்த்தியோ வெற்றியடைய நினைப்பது அவர்களின் வீயூகங்களில் ஒன்று. அண்மையில் இதை அந்த அணியின் வீரரே உறுதிப்படுத்தியிருந்தார்.

அதிலும் அந்த அணியின் கேப்டனாக ஸ்மித்தும் பயிற்சியாளராக டேரன் லீமெனும் நியமிக்கப்பட்டபிறகு அந்த அணியினரின் அத்துமீறல்கள் அதிகமாகின. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களே கூட அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அவர்களின் செயல்களுக்கு எதிர்வினை ஆற்றிய இந்திய கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. கோலி ஆக்ரோஷமானவர் என்றாலும் வம்பிழுத்து வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் அளவிற்கு திறமையற்றவர் கிடையாது.

அவர் திறமையின் மீது நம்பிக்கை கொண்டவர். ஆனால், வம்பு இழுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய ஒழுங்கு போல சித்தரித்து, கோலியை விமர்சித்தன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணியினரின் அத்துமீறல்கள் மிகவும் அதிகமாகின. களத்தில் வீரர்களின் அத்துமீறல்களுக்கும் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கும் கேப்டன் தான் பொறுப்பு. 

அந்த வகையில், ஆஸ்திரேலிய வீரர்களின் அத்துமீறல்கள் அனைத்தும் கேப்டன் ஸ்மித்தின் ஆதரவுடனே அரங்கேறின. டிகாக்குடன் வார்னர் சண்டை, களத்தில் ஒழுக்கமின்மை, டிவில்லியர்ஸ் மீது லயன் பந்தை தூக்கி எறிந்தது என சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

இவை அனைத்திற்கும் மேலாக பந்தை பேன்கிராஃப்ட் சேதப்படுத்திய விவகாரத்தில், ஸ்மித்துக்கு தெரிந்தேதான் பந்து சேதப்படுத்தப்பட்டது என்பதை அவரே ஒத்துக்கொண்டார். இதையடுத்து அவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

ஐசிசி-யும் அதன் பங்கிற்கு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை மற்றும் அபராதம் விதித்தது.

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமோ இத்துடன் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை என கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழும் ஆஸ்திரேலிய அணி, பல இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தது. ஆனால் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்றதில் இருந்தே களத்தில் விதிமீறல்கள், ஒழுங்கீன நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளன. அதுவும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அணியின் நேர்மையே கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திவிட்ட ஸ்மித் மற்றும் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் ஸ்மித்திற்கும் வார்னருக்கும் வாழ்நாள் தடைவிதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.