பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஷார்ட்டுக்கு மூன்றாவது அம்பயர் ரன் அவுட் கொடுத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்துவருகிறது.

இதில் முதலிரண்டு போட்டிகளில் இரண்டிலும் வென்ற பாகிஸ்தான் அணி, 2-0 என தொடரை வென்றுவிட்டது. மூன்றாவது போட்டி இன்று நடக்க உள்ளது. 

2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி  147 ரன்கள் எடுத்தது. 148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஷார்ட்டுக்கு மூன்றாவது அம்பயர் ரன் அவுட் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது. 

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது இமாத் வாசிம் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை பின்சி ஸ்டிரைட்டாக அடிக்க, பந்து வாசிமின் கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது எதிர்முனையில் இருந்த ஷார்ட் கிரீஸை விட்டு வெளியே நின்றார். எனினும் பேட்டை கிரீஸுக்குள் கொண்டுவந்தார். இது ரன் அவுட்டா என்பதை அறிய மூன்றாவது அம்பயரிடம் முடிவு விடப்பட்டது. வீடியோவை ஆராய்ந்த மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். 

ஆனால், ஷார்ட் பேட்டை உள்ளே வைத்துவிட்டதாக அம்பயரிடம் வாதிட்டுவிட்டு சென்றுவிட்டார். ஷார்ட் பேட் கிரீஸுக்குள் இருந்தது. ஆனால் தரையில் பட்டதா படவில்லையா என்பதை கண்டுபிடிப்பது பெரும் கடினமாக இருந்தது. ஆனால் அம்பயர் பேட் தரையில் இல்லை என்பதாக முடிவை அறிவித்துவிட்டார். இது ஆஸ்திரேலிய வீரர்களை அதிருப்தியடைய செய்தது. 

இது தொடர்பாக பேசிய மேக்ஸ்வெல், ஷார்ட்டின் பேட் கிரீஸுக்குள் தரையில்தான் இருந்தது. அதை அவர் பேட்டை பிடித்திருக்கும் விதத்தை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். அம்பயர் பட்டனை மாற்றிவிட்டார் போலும் என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ், நல்ல அவுட் அது. அதற்கு ஏன் இத்தனை கூச்சலும் கூப்பாடுகளும் என்று அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார்.