Australia won the series captures a series of 7-th ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது தொடரை கைப்பற்றி தெறிக்கவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கண்ட இந்திய அணி தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் கடந்த 25–ஆம் தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 300 ஓட்டங்களும், இந்தியா 332 ஓட்டங்களும் எடுத்தன. 32 ஓட்டங்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சுக்கு சமாளிக்க முடியாமல் வெறும் 137 ஓட்டங்களே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணிக்கு 106 ஓட்டங்களை வெற்றி இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

இந்த இலக்கை நோக்கி 2–வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

லோகேஷ் ராகுல் 13 ஓட்டங்களுடனும், முரளிவிஜய் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

4–வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். ராகுல் மளமளவென ஓட்டங்கள் சேகரிக்க, மறுமுனையில் விஜய் அவுட்டாக, அடுத்து இறங்கிய புஜாரா தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார்.

இதைத் தொடர்ந்து பொறுப்பு கேப்டன் ரஹானே ஆட வந்தார். இரண்டு பிரமாதமான சிக்சர்களையும் பறக்க விட்டு ரஹானே அடித்து நொறுக்கினார். இந்திய அணி இலக்கை வேகமாக நெருங்கியது.

வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டபோது, லேகேஷ் ராகுலின் அரைசதத்துக்கும் தேவைப்பட்ட 2 ரன்னையும் ஒன்றாக எடுத்து சேர அவர் தெறிக்கவிட்டார்.

இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி, பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மீண்டும் வசப்படுத்தியது.

2004–ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 7–வது டெஸ்ட் தொடர் இதுவாகும். ஏற்கனவே இலங்கை (2–1), தென்ஆப்பிரிக்கா (3–0), வெஸ்ட் இண்டீஸ் (2–0), நியூசிலாந்து (3–0), இங்கிலாந்து (4–0), வங்காளதேசம் (1–0) ஆகிய அணிகளை வெற்றிக் கண்டது.

அதனைத் தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற சாதனை பட்டியலில் இந்தியா 2–வது இடத்தை பெற்றுள்ளது. தலா 9 தொடர்களை வென்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதலிடத்தில் இருக்கிறது.