ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 63.4 ஓவர்களில் 242 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவை நிலைகுலைய செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி ஓட்டங்கள் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்டீபன் குக்கின் விக்கெட்டை இழந்தது.

பின்னர் வந்த ஆம்லாவும் ஓட்டங்கள் ஏதுமின்றி வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர் 12 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து டுமினி 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.

இதன்பிறகு கேப்டன் டூபிளெஸ்ஸிஸுடன் இணைந்தார் டெம்பா பெளமா. நிதானமாக ஆடிய இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 49 ஓட்டங்கள் சேர்த்தது. டூபிளெஸ்ஸிஸ் 37 ஓட்டங்களில் வெளியேற, விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் களம்புகுந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா மிக மோசமான நிலையில் இருந்து மீண்டது.

டெம்பா பெளமா 86 பந்துகளில் 57 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதையடுத்து பிலாண்டர் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய டி காக் 67 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இதன்பிறகு பிலாண்டர் 10 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க, பின்னர் வந்த கேசவ மகாராஜ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய டிகாக் 101 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டெயின் பவுண்டரியை விளாசிய கையோடு ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 63.4 ஓவர்களில் 242 ஓட்டங்களுக்குச் சுருண்டது. ரபாடா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வார்னர் 73: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர்-ஷான் மார்ஷ் ஜோடி அசத்தலான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. வார்னர் 17 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார். அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த வார்னர் 39 பந்துகளில் அரை சதம் கண்டார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 105 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

வார்னர் 62 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 73, ஷான் மார்ஷ் 67 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.