தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 70.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவை 242 ஓட்டங்களில் விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு, இப்போது தென் ஆப்பிரிக்க பெளலர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 63.4 ஓவர்களில் 242 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 84, டெம்பா பெளமா 37 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 73, ஷான் மார்ஷ் 29 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், ஸ்டெயின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அரை சதம் (100 பந்துகளில்) கண்டார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய வார்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 ஓட்டங்களில் அதை நழுவவிட்டார். அவர் 100 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் சேர்த்து ஸ்டெயின் பந்துவீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் ஆனார்.
அப்போது ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதன்பிறகு பிலாண்டர், மகாராஜ் கூட்டணி அபாரமாக பந்துவீச, ஆஸ்திரேலியாவின் சரிவு தவிர்க்க முடியாததானது. உஸ்மான் கவாஜா 4, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 0, ஷான் மார்ஷ் 63 (148 பந்துகளில்), மிட்செல் மார்ஷ் 0 என அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
இதையடுத்து ஆடம் வோஜஸுடன் இணைந்தார் பீட்டர் நெவில். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 21 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. ஆடம் வோஜஸ் 27 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த மிட்செல் ஸ்டார்க் டக் அவுட்டானார்.
அதைத் தொடர்ந்து பீட்டர் நெவில் 23, ஹேஸில்வுட் 4 ஓட்டங்களிலும், நாதன் லயன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் வெளியேற, ஆஸ்திரேலியா 70.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா கடைசி 86 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர் 4 விக்கெட்டுகளையும், மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
முதல் இன்னிங்ஸில் 2 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீபன் குக் 12 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த ஆம்லா 1 ஓட்டத்தில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து டீன் எல்கருடன் இணைந்தார் ஜே.பி.டுமினி. இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 46, ஜே.பி.டுமினி 34 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
