ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, 539 என்ற இமாலய இலக்கை அடைவதற்கு தடுமாறி வந்த ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தார் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிúஸா ரபாடா.

இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த தொடக்க டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 63.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்கள் சேர்த்தது.
டி காக் அதிகபட்சமாக 84 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 70.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டேவிட் வார்னர் அதிகபட்சமாக 97 ஓட்டங்கள் விளாசினார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலாண்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 160.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 540 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டுமினி 141, எல்கர் 127 ஓட்டங்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது.

இந்தப் போட்டியின் கடைசி நாளான திங்கள்கிழமை 370 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் கவாஜா 58, மிட்செல் மார்ஷ் 15 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடங்கினர்.

இதில் மிட்செல் மார்ஷ் 26 ஓட்டங்களில் வெளியேறினார். சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜாவை 97 ஓட்டங்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி. அடுத்து ஆடியவர்களில் பீட்டர் நெவில் மட்டும் 60 ஓட்டங்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.

மிட்செல் ஸ்டார்க் 13, ஹேஸில்வுட் 29, நாதன் லியான் 8 ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், 119.1 ஓவர்களில் 361 ஓட்டங்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலிய அணி.

5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை ஆட்டம் காணச் செய்த ககிúஸா ரபாடா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.