Asianet News TamilAsianet News Tamil

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி…

australia defeat-south-africa
Author
First Published Nov 28, 2016, 12:08 PM IST


அடிலெய்டு,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பகல் – இரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24–ந் தேதி அடிலெய்டில் தொடங்கியது. பிரத்யேகமாக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்ட இந்த பகல்–இரவு டெஸ்டில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 259 ஓட்டங்களும், ஆஸ்திரேலியா 383 ஓட்டங்களும் எடுத்தன.

124 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3–வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் குக் (81 ஓட்டங்கள்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (0) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 2–வது இன்னிங்சில் 85.2 ஓவர்களில் 250 ஓட்டங்களுக்கு ஆல்–அவுட் ஆனது. டி காக் 5 ஓட்டங்களும், பிலாண்டர் 17 ஓட்டங்களும், ரபடா 7 ஓட்டங்களும், ஸ்டீபன் குக் 104 ஓட்டங்களும் (240 பந்து, 8 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 127 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அந்த இலக்கை 40.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 47 ஓட்டங்களிலும், உஸ்மான் கவாஜா ரன் ஏதுமின்றியும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 40 ஓட்டங்களிலும் வெளியேறினர். அறிமுக வீரர்கள் மேட் ரென்ஷா (34 ஓட்டங்கள்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (1 ஓட்டங்கள்) களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. இருப்பினும் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) தோற்றதில்லை என்ற பெருமையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது. முதல் இரு டெஸ்டுகளில் வெற்றி கண்டிருந்த தென்ஆப்பிரிக்க அணி தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வெற்றிக்குரிய ஓட்டங்களை அடைந்த போது, களத்தில் நின்ற ரென்ஷா, ஹேன்ட்ஸ்கோம்ப் இருவரும் இந்த டெஸ்டில் அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைத்தவர்கள். 139 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலக்கை வெற்றிகரமாக எட்டிய போது களத்தில் இரு புதுமுக வீரர்கள் ஆட்டம் இழக்காமல் இருப்பது இது 2–வது நிகழ்வாகும்.

இதற்கு முன்பு 1880–ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த போது அந்த அணியில் இரு அறிமுக வீரர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios