சிட்னி,

'4 முறை தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்' என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தனது சுயசரிதை புத்தகத்தில் அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் பிராட் ஹாக். 2003, 2007-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்தார். 7 டெஸ்ட் போட்டியில் விளையாடி 17 விக்கெட்டும், 123 ஒருநாள் போட்டியில் ஆடி 156 விக்கெட்டும் வீழ்த்திய பிராட் ஹாக் 2008-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற 45 வயதான பிராட் ஹாக் தனது வாழ்க்கை குறித்த சுய சரிதை புத்தகம் (தி ராங் அன்) எழுதி இருக்கிறார். அந்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அவர் 4 முறை தற்கொலை செய்ய முயற்சித்ததாக பரபரப்பான தகவலை பதிவு செய்து இருக்கிறார்.

மனைவி ஆன்ட்ரியாவுடன் அதிக நேரத்தை செலவிட திட்டமிட்டு கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த பிராட் ஹாக்கின் எண்ணத்துக்கு ஏற்ப குடும்ப வாழ்க்கை அமையவில்லை. மனைவி ஆன்ட்ரியாவுடனான திருமணபந்தம் முறிந்து போனது. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றும் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான பிராட் ஹாக் தனிமையை சமாளிக்க மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். அடிக்கடி மது போதையில் மிதந்ததால் தனது அலுவலக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் பரிதவித்து இருக்கிறார்.

பிரச்சினைகளில் சிக்கி தவித்த பிராட் ஹாக்குக்கு தற்கொலை எண்ணமும் தலை தூக்கி இருக்கிறது. இது குறித்து அவர் குறிப்பிடுகையில், 'போர்ட் பீச் பகுதியில் ஒருநாள் காரை நிறுத்தி விட்டு அப்படியே கடல் ஓரமாக அதனை வெறித்து பார்த்தபடி நடந்தேன்.

கடலுக்குள் இருக்கும் பாறையை நோக்கி செத்தாலும் பரவாயில்லை என்று இருட்டில் நீந்தி சென்றேன். சிறிது நேரத்தில் 4 முறை தற்கொலை எண்ணத்துடன் பாறையை நோக்கி நீந்தி சென்றாலும் என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் திரும்பினேன். ஒன்றை நினைப்பதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எப்படியோ நல்லவேளையாக நான் தப்பித்து கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 44 வயதில் பிராட் ஹாக் இடம் பிடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார். பிக்பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் தற்போதும் விளையாடி வருகிறார்.