தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது ஆஸ்திரேலியா. 

டர்பன் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 351 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.  மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 96 ஓட்டங்கள் எடுத்தார். 

தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா விக்கெட்டுகளை விரைவாக இழந்து 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. டி வில்லியர்ஸ் மட்டும் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, 2-வது இன்னிங்ஸை தொடங்கி 227 ஓட்டங்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பேன்கிராஃப்ட் 53 ஓட்டங்கள் எடுத்தார். 

தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர், 417 என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் அதிகபட்சமாக 143 ஓட்டங்கள் விளாசி வீழ்ந்திருந்தார். கடைசிநாள் ஆட்டத்தை டி காக் 81 ஓட்டங்கள், மோர்ன் மோர்கெல் ஓட்டங்கள்இன்றி தொடங்கினர்.

இதில் கடைசி விக்கெட்டாக டி காக் 83 ஓட்டங்கள்எடுத்திருந்தபோது ஹேஸில்வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். மோர்ன் மோர்கெல் 3 ரன்களுடன் இருந்தார். 

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய அவரே ஆட்டநாயகன் ஆனார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது தென் ஆப்பிரிக்கா.  

கடைசி நாளான நேற்றைய ஆட்டம் தொடங்கிய 18 நிமிடங்களில் டி காக் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதையடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.