தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸின் 20-வது போட்டி இன்று தொடங்குகிறது.

உலகின் 6-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.

சென்னையில் 20-ஆவது முறையாக நடைபெறும் இந்தப் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

சென்னை ஓபனில் கடந்த 8 ஆண்டுகளாக பங்கேற்று வந்த ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா இந்த முறை பங்கேற்கவில்லை. அவர், சென்னை ஓபனில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

முதல் முறையாக 2011-இல் சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்கா, அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக வாகை சூடினார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் பிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்றுள்ளார் வாவ்ரிங்கா. இது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

6 முன்னணி வீரர்கள்: வாவ்ரிங்கா பங்கேற்காவிட்டாலும், சர்வதேச தரவரிசையில் முதல் 50 இடங்களில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் உள்ளிட்ட 6 பேர் சென்னை ஓபனில் களம் காண்பதால் போட்டி கடும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிச் (சர்வதேச தரவரிசை 6) ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகட் (14), மற்றொரு ஸ்பெயின் வீரரான ஆல்பர்ட் ரேமோஸ் (27), ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான் (35), பிரான்ஸின் பெனாய்ட் பேர் (47), குரோஷியாவின் போர்னா கோரிச் (48), ரஷியாவின் மிகைல் யூஸ்னி (57) ஆகியோரிடையே சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் சிலிச், பெளதிஸ்டா, ஆல்பர்ட் ரேமோஸ், மார்ட்டின் கிளிஸான் ஆகியோர் போட்டித் தரவரிசையில் முதல் 4 இடங்களில் இருப்பதால் முதல் சுற்றில் "பை' வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் நேரடியாக 2-ஆவது சுற்றில் களமிறங்குகிறார்கள்.

போட்டித் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் சிலிச்சும், அகட்டும் இறுதிச்சுற்றுக்கு முன்பு வரை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பிப்லை. மரின் சிலிச், மிக எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது அரையிறுதியில் ஆல்பர்ட் ரேமோஸ் அல்லது சகநாட்டவரான போர்னா கோரிச்சை சந்திக்க வாய்ப்புள்ளது.

டிராவின் 2-ஆவது பகுதியைப் பொறுத்தவரையில் ஒரு காலிறுதியில் பிரான்ஸின் பெனாய்ட் பேருடன் ஸ்பெயினின் கார்ஸியா லோபஸ் அல்லது ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான் மோத வாய்ப்புள்ளது. மற்றொரு காலிறுதியில் மிகைல் யூஸ்னியும், பெளதிஸ்டா அகட்டும் மோத வாய்ப்புள்ளது.