கோவையில் வியாழக்கிழமை தொடங்கிய தேசிய இளையோர் தடகளப் போட்டியில் முந்தைய வீரர்களின் சாதனைகளை முறியடித்து தேசிய சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 28 மாநிலங்களைச் சேர்ந்த 1,800 வீரர்கள், 900 வீராங்கனைகள் என சுமார் 2,700 பேர் பங்கேற்கின்றனர்.

இதில், 14, 16, 18, 20 வயதுக்குள்பட்டோருக்கான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் முதல் நாளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

18 வயதுக்கு உள்பட்டோருக்கான உயரம் தாண்டும் போட்டியில் தில்லி மாணவர் தேஜஸ்வின் சங்கர் 2.26 மீ. உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார். முன்னதாக 2011-இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சசிதர் ஹர்சித் 2.17 மீ. தாண்டியதே சாதனையாக இருந்தது.

ஆடவர் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான வட்டு எறிதலில் ஹரியாணாவின் சாஹில் சில்வால் 53.96 மீ. தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்தார். கடந்த ஆண்டு இதே மாநிலத்தைச் சேர்ந்த அபய் குப்தா 53.02 மீ. தூரம் வட்டு எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது.

மேலும், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் குண்டு எறிதலில் பஞ்சாபைச் சேர்ந்த பரம்ஜோத் கெளர் 14.21 மீ. தூரம் எறிந்ததன் மூலம் மகாராஷ்டிர வீராங்கனை மேக்னா தேவாங்காவின் சாதனையை (13.28 மீ.) முறியடித்தார்.

16 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் 2 ஆயிரம் மீ. ஓட்டத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அம்ரிதா பட்டேல் 6.25.66 நிமிடங்களில் இலக்கை எட்டி தேசிய சாதனை படைத்தார். ஆடவர் 2 ஆயிரம் மீ. ஓட்டத்தில் ஹரியாணாவைச் சேர்ந்த விகாஸ் 5.31.87 நிமிடங்களில் இலக்கை எட்டி தேசிய சாதனை படைத்தார்.

முதல் நாள் போட்டிகளின் முடிவில் ஹரியாணா 77 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம், கேரள அணிகள் முறையே 2, 3-ஆவது இடங்களிலும், தமிழகம் 34 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன.