
குயான்டன்,
இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வலைகோற் போட்டி மலேசியாவில் இன்று தொடங்குகிறது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த ‘டாப்–6’ அணிகள் பங்கேற்கும் 4–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் இன்று (வியாழக்கிழமை) முதல் 30–ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘ரவுண்ட் ராபின் லீக்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மலேசியா–பாகிஸ்தான் (பிற்பகல் 1.30 மணி), இந்தியா–ஜப்பான் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் 22–ஆம் தேதி தென் கொரியாவையும், 23–ஆம் தேதி பாகிஸ்தானையும், 25–ஆம் தேதி சீனாவையும், 26–ஆம் தேதி மலேசியாவையும் சந்திக்கிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
2011–ம் ஆண்டில் நடந்த முதலாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2012 மற்றும் 2013–ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை.
இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா–பாகிஸ்தான் மோதும் போட்டி பரபரப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கும். எல்லையில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்காக இந்த போட்டியில் வெற்றி பெற விரும்புகிறோம்’ என்றார்.
