இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெறும் 38 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்டியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிய அஷ்வின், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது பெரும்பாலான நேரம் ஓய்வறையிலேயே இருந்தார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் களத்தில் ஃபீல்டிங் செய்தார். அஷ்வின் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் களத்தில் பெரும்பாலான நேரம் இல்லை.

இந்த போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே அஷ்வின் வீசினார். 8வது ஓவரை மட்டுமே வீசினார் அஷ்வின். இங்கிலாந்து அணி பேட்டிங்கின்போது 20வது ஓவரின் போது களத்திலிருந்து வெளியேறிய அஷ்வின், தான் பந்துவீசிய முறை குறித்து பார்த்துவிட்டு, பிசியோவுடன் இருந்துவிட்டு ஓய்வறையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். பின்னர் களத்திற்கு வந்த அஷ்வின் பந்துவீசவேயில்லை. 

மறுபடியும் 37வது ஓவரின்போது ஓய்வறைக்கு சென்றுவிட்டார். 38.2 ஓவர்களில் இங்கிலாந்து இன்னிங்ஸே முடிந்துவிட்டது. இந்த இன்னிங்ஸில் தொடர்ச்சியாக அஷ்வின் களத்தில் இருக்கவேயில்லை. ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால் அஷ்வின் பந்துவீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வரும் அஷ்வின், அதிலிருந்து குணமடைந்து அடுத்த இன்னிங்ஸ் மற்றும் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம்.