ashwin practicing wrist spin to get back into indian team
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், மீண்டும் அணியில் இடம்பெறுவதற்காக லெக் ஸ்பின்னராக மாறிவருகிறார்.
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தபோது, சுழற்பந்துவீச்சில் அவரது முதல் தேர்வாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இருவருக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு, மைதானத்தில் வெளிப்படுவதை அவ்வப்போது பார்த்திருக்க முடியும்.

ஆனால், கடந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, இந்திய அணியில் லெக் ஸ்பின்னர்களுக்கும் மணிக்கட்டை சுழற்றி வீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்குமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி, சாஹலும் குல்தீப்பும் அசத்தி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இருவரும் விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர். கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் இருவரும் இணைந்து 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹலும் குல்தீப்பும் அசத்திவரும் நிலையில், அஸ்வினுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியில் சாஹலும் குல்தீப்பும் கண்டிப்பாக இடம்பிடிப்பார்கள் என்பதால் அஸ்வினுக்கான வாய்ப்பு சந்தேகம்தான்.

ஆனால், மீண்டும் ஒருநாள் இந்திய அணியில் இடம்பெறுவதற்காக மணிக்கட்டை சுழற்றி லெக் ஸ்பின் வீசி பயிற்சி பெற்றுவருகிறார் அஸ்வின். அணியில் இடம்பிடிக்காத கடந்த 6 மாதங்களில், லெக் ஸ்பின் போட்டு பயிற்சி எடுத்து வருகிறார் அஸ்வின்.

தன்னை ஓரங்கட்டிய இந்திய அணிக்கு, தன்னால் இரண்டு விதமான ஸ்பின் பவுலிங்கையும் போட முடியும் என நிரூபித்து மீண்டும் அணியில் இடம்பெறுவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அஸ்வின். அஸ்வினின் முயற்சிக்கு பலன் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
