டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனை ஒன்றை இவ்வளவு விரைவில் முறியடிக்க உள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓரங்கட்டப்பட்டாலும் டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இக்கட்டான சூழல்களில் அருமையாக ஆடுகிறார். 

அதனால்தான் அஷ்வின் டெஸ்ட் அணியில் அசைக்க முடியாத நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். சீராக விக்கெட்டுகளை குவித்துவரும் அஷ்வின், 65 போட்டிகளில் ஆடி 339 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி வீழ்த்திய 7 விக்கெட்டுகளில் மூன்று விக்கெட்டுகள் அஷ்வின் வீழ்த்தியது. 

மார்கஸ் ஹாரிஸ், ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய 3 விக்கெட்டுகளையும் அஷ்வின் வீழ்த்தினார். இவர்கள் மூவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். இதன்மூலம் அஷ்வின், புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதோடு, சுழல் ஜாம்பவான் முரளிதரன் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த சாதனை ஒன்றை விரைவில் முறியடிக்க உள்ளார்.

இந்த 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 179 இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியுள்ளார் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்து அஷ்வின் தான் உள்ளார். முரளிதரன் 133 போட்டிகளில் ஆடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். அந்த 800 விக்கெட்டுகளில் 191 மட்டுமே இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள். 

ஆனால் 65 போட்டிகளில் ஆடியுள்ள அஷ்வின், 179 இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். முரளிதரனை முந்த இன்னும் 13 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதும்.