ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் டி20 லீக் தொடரில், பல அரிய சம்பவங்கள் நடந்துவருகின்றன. 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதைப் போல ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு சீசன் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதுவரை இரண்டு போட்டிகள் நடந்துள்ளன. 

இந்த இரண்டு போட்டிகளிலுமே இரண்டு அரிய சம்பவங்கள் நடந்துள்ளன. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகள் மோதிய முதல் போட்டியில் பிரிஸ்பேன் அணி வீரர் பேட்டின்சனுக்கு தவறான ரன் அவுட் வழங்கப்பட்டு பின்னர் முடிவு வாபஸ் பெறப்பட்டு பேட்டின்சன் தொடர்ந்து பேட்டிங் ஆடவைக்கப்பட்டார். அவுட்டே இல்லை என்பது ரிவியூவில் தெளிவாக தெரிந்தபோதிலும் மூன்றாவது அம்பயர் ரன் அவுட் கொடுத்துவிட்டார். பின்னர் முடிவு வாபஸ் வாங்கப்பட்டது. 

முடிவு வாபஸ் வாங்கப்பட்டு பேட்டின்சன் மீண்டும் பேட்டிங் ஆடவைக்கப்பட்டாலும் அம்பயரின் அலட்சிய செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

இந்நிலையில், பெர்த் மற்றும் மெல்போர்ன் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் ஆஷ்டான் டர்னர், அடித்த பந்து டாப் எட்ஜாகி மிக உயரே பறந்து ஸ்டேடியத்தின் மேற்கூரை மீது தட்டி மைதானத்திற்குள் 30 யார்டு சர்கிளை தாண்டி விழுந்தது. ஆனால் அதற்கு அம்பயர் சிக்ஸர் கொடுத்தார். பெர்த் அணியின் இன்னிங்ஸின் 12வது ஓவரை கிறிஸ்டியன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பந்து கூரையை தட்டாமல் இருந்தால் சிக்ஸருக்கு சென்றிருக்குமா என்பதை உறுதியாக கூறமுடியாது. ஏனென்றால் நன்றாக டாப் எட்ஜாகி மிக உயரமாக பறந்ததே தவிர தூரமாக செல்லவில்லை. எனினும் அந்த பந்து ஸ்டேடியத்தின் மேற்கூரை மீது தட்டி கீழே விழுந்ததால் சிக்ஸர் கிடைத்தது. 

இந்த போட்டியில் பெர்த் அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மெல்போர்ன் அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.