Asianet News TamilAsianet News Tamil

கங்குலி தலைமையைப் போல, கோலி தலைமையிலும் இந்தியா வெளிநாட்டில் வெற்றி பெறும் – சேவாக்…

as gangulys-leadership-kohli-led-india-will-win-abroad
Author
First Published Dec 3, 2016, 1:20 PM IST


விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. கங்குலி தலைமையிலான இந்திய அணியைப் போன்று, தற்போதைய இந்திய அணியும் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறும் என முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தலா 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சேவாக் மேலும் கூறியிருப்பதாவது: “கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆசியாவுக்கு வெளியிலும் டெஸ்ட் தொடரை வெல்லக்கூடிய தரத்தையும், திறமையையும் கொண்டுள்ளது.

கங்குலி தலைமையிலான இந்திய அணி 2000 முதல் 2004 வரையிலான காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வென்றது.

அந்த அணியின் அளவுக்கு கோலி தலைமையிலான இந்திய அணியும் சிறப்பாக ஆடும். இந்திய அணி வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளது. அதை கோலி முன்னின்று வழிநடத்தி வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

அதேநேரத்தில் விக்கெட்டை வீழ்த்துவதற்கு சிறந்த பந்துவீச்சாளர்கள் தேவை. நம்முடைய அணியில் இப்போது முகமது சமி போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இதேபோல் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தரக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். அதனால் சொந்த மண்ணில் வெற்றிகளைக் குவித்திருக்கும் இந்திய அணியால், நிச்சயம் வெளிநாட்டு மண்ணிலும் வெற்றி பெற முடியும்” என்றார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வரும் ரிஷப் பந்த் குறித்துப் பேசிய சேவாக், "ரிஷப் பந்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. நிச்சயம் அவர் இந்தியாவுக்காக விளையாடுவார்.

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்காத நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகிறார். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அவரைப் போன்ற ஒரு வீரரை இதுவரை பார்த்ததில்லை.

எல்லாவற்றுக்கும் ஒரு நடைமுறை இருக்கிறது. ரிஷப் பந்து தொடர்ந்து இதுபோன்று விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக, இந்திய "ஏ' அணிக்காக விளையாட வேண்டியுள்ளது.

இந்திய "ஏ' அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு நிச்சயமாக கிடைக்கும். அதை அவர் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது என நம்புகிறேன்' என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios