19 வயதுக்கு உட்பட்ட வினூ மங்கட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். இவர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் இடம்பெற்று ஆடினார். அந்த தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு அர்ஜூன் டெண்டுல்கர் சோபிக்கவில்லை. 

இங்கிலாந்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, வலைப்பயிற்சியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு பந்துவீசினார். அர்ஜூன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால், இடது கை வேகப்பந்து வீச்சை சிறப்பாக ஆடும் விதமாக அர்ஜூன் டெண்டுல்கரை பந்துவீச வைத்து தோனி, ரெய்னா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். 

இந்நிலையில், தற்போது 19 வயதுக்கு உட்பட்ட வினூ மங்கட் டிராபி தொடரில் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் ஆடிவருகிறார். இதில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8.2 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஜூன் டெண்டுல்கர்.

அர்ஜூனின் அபார பந்துவீச்சால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, வெறும் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியின் வர்த்மான் தத்தேஷ் ஷா, ப்ரியேஷ், கோச்செர், ஜெய்மீட் படேல், துருவங் படேல் ஆகிய ஐந்து விக்கெட்டுகளை அர்ஜூன் டெண்டுல்கர் வீழ்த்தினார். 

இதையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.