Annual salary of Indian cricketers rises to 100 percent BCCI is preparing the list ...
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை 100 சதவீதமாக உயர்த்த பிசிசிஐ பட்டியல் ஒன்றை தயார் செய்து வருவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் "ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.2 கோடி அளிக்கப்பட்டு வருகிறது.
"பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 கோடியும், "சி' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.50 இலட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. அதிக போட்டிகளில் கலந்து கொள்வதால், வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராயிடம், விராட் கோலி, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை 100 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய ஊதிய பட்டியலை வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு தயாரித்து வருவதாக தகவல் ஒன்ற் கசிந்துள்ளது.
அதன்படி, இதுவரை வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை அளிக்க பிசிசிஐ ரூ.180 கோடியை ஒதுக்கி வருகிறது. தற்போது, அந்தத் தொகையுடன் மேலும் ரூ.200 கோடி கூடுதலாக சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதன்காரணமாக, அந்தத் தொகை ரூ.380 கோடியாக அதிகரிக்கும்.
மேலும், பிசிசிஐ மொத்த ஆண்டு வருவாயில் 26 சதவீதம் 3 பகுதியாக பிரிக்கப்படும். முதல் தர வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்துக்கு 13 சதவீதமும், இரண்டாம் தர வீரர்களுக்கு 10.6 சதவீதமும், எஞ்சியுள்ளவை மகளிர் மற்றும் ஜூனியர்களுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கான ஆண்டு ஊதியமும் புதிய ஊதிய பட்டியலில் மாறுபாடும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 46 ஆட்டங்களில் விளையாடிய கோலிக்கு பிசிசிஐ ரூ.5.5 கோடி ஊதியம் அளித்துள்ளது. புதிய ஊதிய பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, அவரது ஆண்டு வருவாய் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
