ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், உலகின் முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் ஸு யிங்குடன் மோதினார். இதில் 14-21, 18-21 என்ற செட்களில் டாய் ஸு யிங்கிடம் தோல்வி கண்டார் சாய்னா. 

இது, சாய்னா கடந்த ஐந்து ஆண்டுகளில் டாயிடம் சந்திக்கும் 8-வது தொடர் தோல்வியாகும். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் டாய் ஸு விரைவாக முன்னேற, பின்னர் மீண்ட சாய்னா 10-10 என சமன் செய்தார். 

அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி 14-14 என டாய் ஸு உடனேயே பயணித்தார். பின்னர் சாய்னா சற்று சறுக்க, அதைப் பயன்படுத்தி முன்னேறிய டாய் ஸு, அந்த செட்டை தனதாக்கினார்.

இரண்டாவது செட்டிலும் பின்தங்கியிருந்த சாய்னா முதலில் 10-7, பின்னர் 16-11 என எதிர்பாராத வகையில் முன்னேறி வந்தார். பின்னடைவிலிருந்து மீண்ட டாய் ஸு 17-17 என முதலில் சமன் செய்து, பிறகு அந்த செட்டையும் வென்றார். 

இந்த ஆட்டம் 31 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.