ஹரியாணா காவல்துறையில் துணை கண்காணிப்பாளர்களாக இருக்கும் குத்துச்சண்டை வீரர்களான அகில் குமார், ஜிதேந்தர் குமார் ஆகிய இருவரும், தொழில்முறை போட்டிகளில் பங்கேற்பதற்காக மாநில காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.
இருவரும் டிசம்பர் மாதம் தங்களது தொழில்முறை குத்துச்சண்டையின் முதல் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அகில் குமார் கூறுகையில், "ஹரியாணா மாநில டிஜிபி கே.பி.சிங்கை சந்தித்து, நாங்கள் அனுமதி கோரும் கடிதத்தை அளித்துள்ளோம். அதை அவர் உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள் பலருக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்குவித்த வரலாறு ஹரியாணா காவல்துறைக்கு உள்ளது. அதேபோல், எங்கள் விவகாரத்திலும் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்' என்றார்.
தொழில்முறை குத்துச்சண்டையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மற்றொரு வீரரான விஜேந்தர் சிங்கும், ஹரியாணா மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
