ரன் மெஷின் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அடுத்தடுத்து சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இந்த சாதனையை டிவில்லியர்ஸ், கிப்ஸ், அன்வர், டெய்லர், பேர்ஸ்டோ, டி காக் உள்ளிட்ட 8 வீரர்களுடன் பகிர்ந்துள்ளார். இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் நான்காவது போட்டியில் சதமடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் 4 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் குமார் சங்ககராவை சமன் செய்துவிடுவார் கோலி. 

ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் விளாசியுள்ள கோலி, 62 சர்வதேச சதங்களுடன், சச்சின், பாண்டிங், சங்ககராவிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார் கோலி. 782 இன்னிங்ஸ்களில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால் கோலி வெறும் 388 இன்னிங்ஸ்களில் 62 சதங்களை விளாசியுள்ளார். 

இந்நிலையில், ஹாட்ரிக் சதமடித்த கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அக்தர், இலக்கு ஒன்றையும் நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அக்தர், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதமடித்த முதல் இந்திய வீரர் விராட் கோலி.. என்ன ஒரு கிரேட் ரன் மெஷின்.. தொடர்ந்து இதேபோல் ஆடி 120 சதங்களை குவிக்க வேண்டும். இது நான் உங்களுக்கு நிர்ணயிக்கும் இலக்கு என்று அக்தர் பதிவிட்டுள்ளார். 

சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள்(100 சர்வதேச சதங்கள்) சாதனையை கோலி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 100 சதமெல்லாம் கோலிக்கு சர்வ சாதாரணம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், 120 சதங்களை இலக்காக நிர்ணயித்துள்ளார் அக்தர்.