Asianet News TamilAsianet News Tamil

ஒரு வழியா டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அகர்வால்!! திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்

ஆஸ்திரேலிய தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ள பிரித்வி ஷாவிற்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள மயன்க் அகர்வால் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 
 

agarwal should prove his talent in australia series
Author
Australia, First Published Dec 21, 2018, 1:57 PM IST

ஆஸ்திரேலிய தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ள பிரித்வி ஷாவிற்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள மயன்க் அகர்வால் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இந்தியா ஏ மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த மயன்க் அகர்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இந்தியா ஏ அணியிலும் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவந்தார் மயன்க் அகர்வால். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய அகர்வால், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் அண்மையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் கூட அபாரமாக ஆடினார். 

உள்நாட்டு போட்டிகளில் போதுமான அளவிற்கு திறமையை நிரூபித்தாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கூட மயன்க் அகர்வால் இடம்பெற்றிருந்தாலும் பிரித்வி ஷாவிற்குத்தான் ஆடும் லெவனில் இடம்கிடைத்தது. அதுவே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பிரித்வி ஷாவும் சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்ததோடு அனைவரின் பாராட்டையும் பெற்றார். 

agarwal should prove his talent in australia series

அதனால் பிரித்வி ஷாவின் இடம் இந்திய அணியில் உறுதியானது. ஆஸ்திரேலிய தொடரிலும் பிரித்வி ஷா தான் அணியில் இடம்பிடித்தார். அகர்வால் புறக்கணிக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அகர்வாலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பே கொடுக்காமல் ஆஸ்திரேலிய தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்தன. 

ஜாகீர் கான், கவுதம் காம்பீர் ஆகிய முன்னாள் வீரர்கள் மயன்க் அகர்வால் புறக்கணிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்தனர். அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பிரித்வி ஷாவிற்கு பதிலாக அணியில் எடுக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து சொதப்பிவரும் ராகுலுக்கு பதிலாக அவரை எடுக்க வேண்டும் என்ற கருத்து இருந்தது. 

agarwal should prove his talent in australia series

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அகர்வால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பிரித்வி ஷாவின் காயத்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ராகுலும் முரளி விஜயும் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிவிட்டனர். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகர்வால் கண்டிப்பாக ஆடுவார். அகர்வாலுடன் ஆடப்போவது யார் என்பது இனிமேல்தான் தெரியவரும். 

agarwal should prove his talent in australia series

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் அகர்வாலுக்கு கடும் நெருக்கடி உள்ளது. அவர் களமிறங்கும் போட்டியில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர் சரியாக ஆடாததை காரணம் காட்டி அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் மறுக்கப்படும். பிரித்வி ஷா, ராகுல் ஆகிய இருவருக்கும் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தின் ஆதரவு அமோகமாக இருப்பதால், அகர்வால் திறமையை நிரூபித்தால் மட்டுமே தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். முரளி விஜயே கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது அனுபவத்தின் காரணமாகத்தான் எடுக்கப்பட்டார். மேலும் இரண்டே இரண்டு தொடக்க வீரர்களுடன் செல்ல முடியாது, கூடுதல் வீரர் தேவை என்ற வகையில்தான் முரளி விஜய் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். ஆனால் பயிற்சி போட்டியில் பிரித்வி காயமடைந்ததால்தான் முதலிரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெற்றார். இல்லையென்றால் பிரித்வியும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்தன. 

agarwal should prove his talent in australia series

இப்படியாக ராகுலுக்கும் பிரித்விக்கும் அமோக ஆதரவு இருக்கும் நிலையில், அதையெல்லாம் கடந்து அணியில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் அகர்வால் முரட்டு அடியாக அடித்தே தீரவேண்டும். அகர்வால் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios