ஜடேஜாவை அணியில் எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்தில் கோலி இருப்பதாக முன்னாள் வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குல்தீப் யாதவிற்கு ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

குவாஹத்தி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும் என்பதால், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டனர். அதனால் சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களையும் எடுத்துவிட்டால், அணியில் ஆல்ரவுண்டர் ஒருவர் கூட இருக்கமாட்டார். ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகிய பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருப்பதால், தற்போதைக்கு இந்திய அணியில் இருக்கும் ஒரே ஆல்ரவுண்டர் ஜடேஜா மட்டும்தான். 

இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழிகின்றனர். ஆனால் ஆல்ரவுண்டருக்கு பஞ்சமாக இருக்கிறது. அதனால் ஜடேஜா ஒருவர் தான் ஆல்ரவுண்டர் என்பதால் அவரை எடுக்க வேண்டிய நிலை இருப்பதாக அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், ஜடேஜா சரியாக ஆடவில்லை என்றால், அவருக்கான மாற்று குறித்து கோலி யோசிக்க வேண்டும். இப்போதைக்கு இந்திய அணியில் இருக்கும் ஒரே ஆல்ரவுண்டர் ஜடேஜா மட்டும்தான். அதனால் அவரை அணியில் எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்தில் கோலி இருப்பதாக அகார்கர் தெரிவித்துள்ளார்.