வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொதப்பிய ஷிகர் தவான், டி20 தொடரில் சிறப்பாக ஆடுவார் என அகார்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. ரோஹித் களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். இல்லையென்றால் சொற்ப ரன்களில் வெளியேறிவிடுவார். ஆனால் தவான் சீராக ஆடி ரன்களை எடுக்கக்கூடியவர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சொதப்பிய தவான், ஆசிய கோப்பையில் அபாரமாக ஆடினார்.

ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிய தவான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் சொதப்பிவிட்டார். சிறப்பாக தொடங்கிய சில போட்டிகளில் அதை பெரிய ஸ்கோராக மாற்ற தவறிவிட்டார். இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸின் ஒஷேன் தாமஸின் பவுலிங்கில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

5 போட்டிகளிலும் சேர்த்தே 112 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித்தும் கோலியும் ரன்களை குவித்த நிலையில், தவான் மட்டும் சோபிக்க தவறியது அவருக்கு பெரிய ஏமாற்றம்தான். ஆனால் தவான் வைத்தால் குடுமி.. சிரைத்தால் மொட்டை என்று ஆடுபவர் அல்ல. எப்போதுமே சீராக ஆடக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகக்கூட சிறப்பாக தொடங்கினார். ஆனால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லையே தவிர மொக்கையாக ஆடவில்லை. 

எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டு வந்து சிறப்பாக ஆடுவார் என்று முன்னாள் வீரர் அகார்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உள்ளதால், அதில் சிறப்பாக ஆடுவதற்கான உத்வேகத்தை பெறும் வகையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் தவான் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.