இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வென்று ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்று அசத்தியுள்ளது. 

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதையடுத்து நடந்த ஒரே ஒரு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வென்றது. 

இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்து 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 

இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் எதிரணியை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக 1963ம் ஆண்டு நியூசிலாந்தில் அந்த அணியை ஒயிட் வாஷ் செய்து 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பிறகு 55 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது.